உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் கொடுமைக்கு ஆளான அந்தப் பெண் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் ரேபரேலி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த ட்ரக் லாரி ஒன்று அவர்கள் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், அப்பெண்ணும், அவரது வழக்கறிஞரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரையும், உரிமையாளரையும் கைது செய்து போலிஸார் விசாரித்து வந்தனர். படுகாயமடைந்த அந்தப் பெண்ணும் தம்மைக் கொல்ல முயற்சி நடப்பதாக புகார் அளித்தார்.
லாரியின் எண் பலகை கருப்பு மையால் பூசி மறைக்கப்பட்டிருந்ததால் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதன் முதல் விசாரணை அறிக்கையை சிபிஐ நேற்று பதிவு செய்தது.
அதில், குல்தீப் செங்கார் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு நீக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு லாரியை ஓட்டி வந்த ஆஷிஷ்குமார் மீது கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்கார் மீதான கொலை முயற்சி புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றும், அன்று நடைபெற்றது எதிர்பாராத தற்செயலான ஒரு சாலை விபத்துதான் என்றும் சிபிஐ முடிவுக்கு வந்துள்ளது.
சிபிஐ-யின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். மேலும், சிபிஐ பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குற்றம் சாட்டிவருகின்றனர்.