இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என மூடி மறைத்து வருகிறது. இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் இளைஞர்கள் அதிக வேலையில்லாமல் தவித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ - Centre for Monitoring Indian Economy (CMIE) மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பா.ஜ.க ஆட்சி செய்யும் திரிபுரா தான் வேலையின்மை விகிதத்தில் 31.2 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கினர் வேலையில்லாமல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதனையடுத்து, டெல்லி 20.4 சதவீதமும், ஹரியானா 20.3 சதவீதமும், ஹிமாச்சல பிரதேசம் 15.6 சதவீதமும், பஞ்சாப் 11.1 சதவீதமும், ஜார்கண்ட் 10.9 சதவீதமும், பீகார் 10.3 சதவீதமும், சத்தீஸ்கர் 8.6 சதவீதமும், உத்தர பிரதேசம் 8.2 சதவீதமும், ராஜஸ்தான் 7.4 சதவீதமும், சிக்கிம் 6.4 சதவீதமும், குஜராத் 6.2 சதவீதமும், மேற்கு வங்கம் 6 சதவீதமும், கேரளாவில் 5.4 சதவீதமும், கர்நாடாகவில் 3.3 சதவீதமும் வேலையின்மை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், இந்தியாவின் ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே 1.8 சதவீதத்துடன் மிகக் குறைந்த வேலையின்மையைக் கொண்டுள்ளதாக இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதம் மட்டுமே வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம், 2017-2018ம் ஆண்டுக்காக தயாரித்த அறிக்கையை, ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’ நாளிதழ் வெளியிட்டது. அதில், “2017-18-ம் ஆண்டில் இந்தியாவில், வேலையின்மை அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதம் அதிகரித்து விட்டது.
இதற்கு முன்பு, 1972-73ம் ஆண்டில் தான் இந்த அளவிற்கான வேலையின்மை இருந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும், “இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவிகிதம் உயர்ந்து தற்போது 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதுவே, நகர்ப்புறங்களில் 7.8 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவிகிதமாகவும் இருந்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரலில் 7.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க மேம்படுத்தியுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்த புள்ளிவிவரம் நிச்சயம் கலக்கத்தை எற்படுத்தும். ஏற்கெனவே, பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, ஆகியவற்றால் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.