தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலங்கானா மாநில சாலை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் கால வரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமைக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென தெலங்கானா அரசு கெடு விதித்திருந்தது.
ஆனாலும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பவில்லை. இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதனை அடுத்து பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யுமாறு, உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்துக் கழகம் கடன் நெருக்கடியில் இருக்கும் போது, வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது எனவும், பண்டிகைக் காலகட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வது பெரும் குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சந்திரசேகர ராவ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ், புதிதாகச் சேர்க்கப்படுபவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என உறுதியளித்த பின்னர் தான் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் உருவாவதற்கான காரணமாக இருந்த மக்களை இந்த அரசு நடுரோட்டில் தள்ளிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.