இந்தியா

“தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவதா?”- சிபிஐ(எம்) கண்டனம்!

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான கொடூரத்தாக்குதல் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவதா?”- சிபிஐ(எம்) கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திடுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய எழுத்தாளர் ராமசந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டுக்கறி, ஜெய்ஸ்ரீராம் ஆகியவற்றை முன்வைத்து கும்பல் வன்முறைகளும், கொலைகளும் பெருகியுள்ளதை அரசு ஆவணங்களே வெளிப்படுத்தி வருகின்றன.

தற்போது 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்த வன்முறைகள் இரட்டிப்பாகியிருப்பதாக ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அரசும், அரசு அமைப்புகளும் வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது மனச்சாட்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது.

“தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவதா?”- சிபிஐ(எம்) கண்டனம்!

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட திரைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் உள்ள 49 பேர் இவற்றை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இது அனைவராலும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்தக்கடிதம் தேசவிரோதமானது என வடமாநிலத்திலுள்ள ஒரு நீதிமன்றம் அறிவித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதையொட்டி இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வன்முறைகளையும், கொலைகளையும், சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டிய அரசும், அரசு அமைப்புகளும் மவுனமான நிலையில் இருக்கும்போது தேசபக்தியும், மனித நேயமும், அரசியல் சட்டத்தின் மீது அக்கறையும், ஜனநாயகத்தின் மீது மதிப்பும் கொண்டவர்கள் இச்செயல்களை விமர்சிப்பதும், கண்டிப்பதும், நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் தேச பக்த செயலே. இவற்றை கொண்டாடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான கொடூரத்தாக்குதலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அரசு மற்றும் அரசு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. மேற்கூறிய கடிதமெழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும். அந்தக் கடிதத்தை எழுதியவர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயக உள்ளம் படைத்த அனைத்துப் பகுதியினரும் வன்முறைக்கு எதிராக கடிதம் எழுதியவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories