இந்தியா

மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு!

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய எழுத்தாளர் ராமசந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரைப் பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில்,“நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது” என்பது உள்ளிட்ட பல கருத்துகளை அந்தக் கடித்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 3) பீகாரின் முசாபர்பூரில் ராம்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உள்ளிட்ட 50 பிரபலங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் இவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் மீது நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்ட 50 பேர் மீதும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த மனுவில், நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேசத் துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் நன்மதிப்பையும் தேசத்தையும் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்ததற்காக தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது என பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories