மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.கட்சி, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்து நாட்டின் வருவாயை பெருக்குவதாக அறிவித்தது. ஆனால் அது தற்போது ஏற்படுள்ள மந்தநிலைக் காரணமாக வருவய் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பு என்பது கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசனது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி வருவாய் குறித்த தகவலை மத்திய அரசு செவ்வாய்கிழமையன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இதில், மத்திய ஜி.எஸ்.டி-யாக 16 ஆயிரத்து 630 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி-யாக 22 ஆயிரத்து 598 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக 45 ஆயிரத்து 69 கோடியும் வசூலாகி இருக்கிறது. ‘செஸ்’ எனப்படும் கூடுதல் வரி வருவாய் 7 ஆயிரத்து 620 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டின், இதே செப்டம்பர் மாதத்தில்கூட, ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 94 ஆயிரத்து 442 கோடியாக இருந்துள்ளது. தற்போது அதைக்காட்டிலும் 2.67 சத விகிதம் வருவாய் குறைந்துள்ளது. மேலும், தற்போது வசூலாகியுள்ள தொகைதான், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவு என்று கூறப்படுகிறது.
அத்துடன், தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜி.எஸ்.டி வரி வருவாய் வசூல் ஒரு லட்சம் கோடிக்கு கீழே போயிருக்கிறது. நாட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்ததே, ஜி.எஸ்.டி வருவாய்க் குறைவுக்குக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் பண்டிகைக் காலம் என்பதால் இம்மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.