உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தாவிற்கு எதிராக சட்ட மாணவி கல்லூரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சின்மயானந்தா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பா.ஜ.க தலைவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக சட்ட மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்ட கல்லூரி மாணவிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் “நியாய யாத்திரை” என்ற பெயரில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
ஷாஜஹான்பூர் முதல் லக்னோ வரை 180 கி.மீ. தூரத்துக்கு 5 நாள் பேரணி நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க இருந்தனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரணியை தடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். இதில் பங்கேற்க வந்த சுமார் 80 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் நடத்த இருந்த பேரணியை உத்தரப் பிரதேச அரசு தடுத்து நிறுத்தி, காங்கிரஸ் தலைவர்களை கைது செய்துள்ளது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அதிகாரத்தின் ஆணவத்தால் ஜனநாயகத்தை பாஜ அரசு அழிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பாதுகாப்பதற்காகவும் மற்றும் ஷாஜஹான்பூரின் மகளுக்கு நீதி கேட்பவர்களின் குரலை ஒடுக்குவதற்காகவும் அரசு எதை வேண்டுமானாலும் செய்யும்.
உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்குகிறது. தங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று அறிந்தவுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டி பதிவிட்டுள்ளார்.