கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்தன. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் பணம் அளிக்காததால் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, குழந்தைகள் வார்டு பொறுப்பாளர் டாக்டர். கஃபீல் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டாக்டர். கஃபீல் கான் பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர், தனது சொந்த காசில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி மேலும் குழந்தைகள் பலியாகாமல் தடுத்ததே கைது செய்யப்பட்ட டாக்டர்.கஃபீல் கான்தான் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க துறை ரீதியாக அமைக்கப்பட்ட குழு கஃபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கும் மருத்துவர் கஃபீல் கான் காரணமல்ல. அவர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரத் தான் பாடுபட்டார். மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது குறித்து முன்கூட்டியே எச்சரித்துள்ளார். மேலும், அவரே தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி குழநதைகளின் உயிரைக் காக்க போராடியதாக விசாரணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர் கஃபீல் கான் கூறும்போது, “நான் பலிகடாவாக ஆக்கப்பட்டேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என்றார். மேலும், ''இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசு மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.