‛துாய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸின், 'பில் - மெலின்டா கேட்ஸ்' தொண்டு நிறுவனம் சார்பில், மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை பில்கேட்ஸிடமிருந்து பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா’ (Swachh Bharat) திட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி துவக்கிவைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியிருப்பதாகத்தான் அமெரிக்காவில் விருது பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி.
‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக மோடி விருதுபெற்ற அதேநேரம், இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் நிகழ்ந்த விஷயம் என்ன தெரியுமா? மத்திய பிரதேச மாநில கிராமமொன்றில் பொதுவெளியில் மலம் கழித்ததாகக் கூறி இரு சிறுவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் மலம் கழித்ததாகக் கூறி, பட்டியலினத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அவினாஷ் மற்றும் 12 வயது சிறுமி ரோஷினி ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
பொது இடத்தில் மலம் கழிக்கச் சென்ற குழந்தைகளை அந்த ஊரைச் சேர்ந்த ஹகாம் என்பவர் தடுத்ததாகவும், பிறகு ராமேஷ்வர் என்பவருடன் சேர்ந்து தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் கொலை தொடர்பாக ஹமீம் மற்றும் ராமேஷ்வர் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள சிறுவன் அவினாஷின் தனதி மனோஜ் வால்மீகி, “எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பதால் வெளியே சென்று மலம் கழிக்கும் சூழலே இருக்கிறது. அதிகாலை 6 மணிக்கு மலம் கழிக்கச் சென்றவர்களை ஹகாம் மற்றும் ராமேஷ்வர் இருவரும் கட்டையால் தாக்கியுள்ளனர். அவர்கள் சாகும் வரை அடித்துக் கொன்றுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
இங்கே, திறந்தவெளியில் மலம் கழித்ததாக குற்றம்சாட்டி கொலைசெய்யும் அவலம் நிகழ்கையில், கொஞ்சமும் கூச்சமின்றி மோடி விருது பெற்றிருப்பதாக பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.