கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘காப்பான்’ திரைப்படத்தில், இந்திய பாதுகாப்பு படையின் உளவு அமைப்பில் ஒருவராக இருந்து பின்னர் பிரதமரின் முதன்மைப் பாதுகாவலராக உயர்பவராக நடித்திருப்பார் சூர்யா.
நாட்டு மக்களின் நன்மைக்காவும், பாதுகாப்புக்காகவும் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் ஈடுபடும் நாடுகளில் உளவு பார்க்க இந்திய வீரர்களை அனுப்பி உளவு பார்ப்பது வழக்கம்.
அதுபோல, காப்பான் படத்திலும் முதலில் உளவு அதிகாரியாக வரும் சூர்யா, பாகிஸ்தானில் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதாக வந்த தகவலை அடுத்து அந்நாட்டில் உளவு பார்க்கச் செல்வார். அங்கு முடிதிருத்தும் பணியாளராக நடித்தபடியே, அந்த அணு ஆயுதக் கிடங்கில் இருப்பவர்களின் தலை முடி சாம்பிள்களை வைத்து அதன் மூலம் அணுக்கதிர்வீச்சைக் கணக்கிட்டு பாகிஸ்தானில் அணு ஆயுதம் தயாரிப்பதைக் கண்டுபிடிப்பார்.
இந்தக் காட்சி முதன்முறையாக காண்போருக்கு புதுமையாகவும், கற்பனையாக வைக்கப்பட்ட காட்சியாகவே தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் இதுபோன்ற சம்பவம் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலமான 1970களில் நடந்துள்ளது.
குகன் என்பவர் எழுதிய ‘இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது?’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் உள்ள கஹுதா என்ற பகுதியில் அணு மின் நிலையம் ஒன்று இயங்கி வந்தது. அங்கு மின்சாரத்துக்கு பதில் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக இந்திய அரசுக்கு சந்தேகம் எழுந்தது.
ஆகவே, அந்த சந்தேகத்தை உறுதிபடுத்துவதற்காக ‘ரா’ ஏஜென்ட்களை ஏவி உளவு பார்த்தது இந்தியா. அதில், நேரடியாக கஹுதாவில் உள்ள ஆலைக்குள் நுழைவது என்பது முதலை வாயில் காலை விடுவதற்குச் சமம் என்பதால், அந்தப் பகுதியில் இருந்த முடிதிருத்தகத்தில் இருந்தபடியே, அணுமின் நிலைய விஞ்ஞானிகளின் தலை முடியை சேகரித்து ஆய்வு செய்ய இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு அதன் மூலம் கதிர்வீச்சு தடையம் கிடைத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் உள்ள அனுமின் நிலையத்தில் புளூட்டோனியம் சுத்திகரிப்பு செய்யப்பட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பே அணு ஆயுதத்தை பாகிஸ்தான் நிர்வகித்து வந்த மாபெரும் ரகசியத்தை இந்திய உளவு வீரர்கள் அறிவியலின் துணைகொண்டு வெறும் முடியை வைத்தே அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
‘காப்பான்’ திரைப்படத்தில் இதேபோன்ற காட்சி இடம்பெற்றிருப்பதையடுத்து, இந்தியாவின் ‘ஆபரேஷன் கஹுதா’ ரசிகர்களின் தேடலுக்குள்ளாகி வருகிறது.