வடகிழக்கு மாநிலமான அசாமில் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக குடியேறி இந்திய அரசின் வாக்குரிமை உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவித்து வருவது நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு விரும் விவகாரம். அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்தாண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் 40 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதையடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறு மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. அசாமில் வசிக்கும் பலரும், முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, பெயர்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 3 கோடியே 11 லட்சத்து 21ஆயிரம் பேர் அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வ இந்திய குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர்.
19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கள் பெயர் இல்லை என்ற கவலையில் சிலை தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அசாமில் கொண்டு வரப்பட்ட இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ” தேர்தலின் போது தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமல்படுத்தபடும் என்று கூறியிருந்தோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பதிவு செய்யப்படுவர். சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த வாக்குறுதிக்கு மக்கள் ஒப்புதல் வழங்கி தான் எங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆதலால், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். வெளிநாடுகளில் உங்களால் எளிதாக குடியேறிவிட முடியுமா? தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்த நேரத்தில் அவசியமான ஒன்று'' என தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.