இந்தியா

“இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க போராட்டத்தை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது” : திருமாவளவன் பேட்டி!

இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க அமித்ஷா துடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என திருமாவளவன் கூறியுள்ளார்.

“இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க போராட்டத்தை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது” : திருமாவளவன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான இரட்டைமலை சீனிவாசனின் 74வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமித்ஷாவின் பேச்சுகளும், கருத்துகளும் அடிப்படை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஒரே மொழி, ஒரே ஆட்சி என தொடர்ந்து அமித்ஷா பேசி வருவது அரசியலமைப்புச் சட்டத்தையே சீர்குலைக்கிறது. இந்தியை மட்டுமே தேசிய மொழியாக நிலைநிறுத்தவேண்டும் என அமித்ஷா துடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்றார்.

“ஒரே மொழியாக இந்தியை மாற்ற மோடி அரசு முயற்சிக்கும் இந்த சமயத்தில், அந்த முடிவை எதிர்த்து தி.மு.க போராட்டம் நடத்த இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றும் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ராகுல் காந்தியை அவமதிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் பேசினார் எனத் தெரியவிலை. அவரது பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேசுவது அரசியலுக்கும், அவர்களுக்கும் நல்லது” எனத் தெரிவித்தார்.

மேலும், “பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இதுவரை ஆளுங்கட்சி சார்பில் இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. பேனர் அச்சிட்ட அச்சகம் மீது நடவடிக்கை எடுக்கத் துடிக்கும் காவல்துறை, பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories