நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், கடந்த மாதம் 20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.
அதன் பிறகு, 5 முறை சந்திரயானின் சுற்று வட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து, செப்.,2ம் தேதி சந்திரயான் விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பை நோக்க பயணிக்கத் தொடங்கியது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து லேண்டரின் இயக்க பணிகளை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். நிலவில் தரையிறங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரின் நிலை என்ன ஆனது என்ற தகவலும் இல்லை. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து இருந்தார்.
மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரோபர் ரோபோவையும் மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர அமெரிக்காவும் உதவ முன்வந்தது. ஆனாலும் லேண்டர் விண்கலத்தில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை. ஆனாலும் 20-ம் தேதி வரை 20-ம் தேதி வரை முயற்சிகள் நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களுக்கு ஆதரவாக நின்றதற்கு நன்றி. நம்பிக்கைகள் மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களின் கனவுகள் அளிக்கும் உத்வேகத்தால் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இஸ்ரோவுக்கு தேவையான உபகரணங்களை வழங்க உள்ளது.