நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன் பிறகு, 5 முறை சந்திரயானின் சுற்று வட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதி சந்திரயான் விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இஸ்ரோ மையத்தில் இருந்து லேண்டரின் இயக்க பணிகளை விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.
நிலவில் தரையிறங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விக்ரம் லேண்டருக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், இஸ்ரோ, தமது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்கு ஆதரவாக நின்றதற்கு நன்றி. உலகெங்கும் உள்ள இந்தியர்களின் கனவுகளின் உத்வேகத்தால் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 10,000 கோடி ரூபாய் செலவில், 2021ம் ஆண்டின் இறுதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது இஸ்ரோ. ‘ககன்யான்’ எனும் இந்தத் திட்டத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் இடம்பெறுவார்கள்.
இந்த விண்கலத்துக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வுக்கும், இஸ்ரோவுக்கும் இடையே டெல்லியில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன்படி, விண்வெளி வீரர்களுக்கான உணவு, வீரர்களின் உடல்நிலையை கண்காணிப்பது மற்றும் அவசரகால உயிர்காக்கும் கருவிகள், கதிர்வீச்சு கணக்கிடுதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், விண்கலத்தை பாதுகாப்பாக மீட்பதற்கான பாராசூட்கள் உள்ளிட்டவற்றை டிஆர்டிஓ வழங்கும்.
இஸ்ரோவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் தொழில்நுட்பங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.