உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''நாட்டில் வேலைகளுக்கு பஞ்சமில்லை. வேலைக்கு ஆட்சேர்க்க வடஇந்தியாவுக்கு வருபவர்கள் எங்களிடம் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் ஒருசிலரே உள்ளனர் என கூறுகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு வடஇந்திய அரசியல்வாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமைச்சரின் இந்த கருத்திற்கு உத்தர பிரதேச காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமைச்சரே, உங்கள் அரசாங்கம் வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. உங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இங்கு இருந்த வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் ஏதாவது நல்லது செய்யும் என்று இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வட இந்தியர்களை அவமதித்து தப்பிக்க விரும்புகிறீர்கள். அது நடக்காது'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் வேறொரு அர்த்தத்தில் கூறினேன், திறன் பற்றாக்குறை உள்ளதால் திறன் வளர் மேம்பாட்டு அமைச்சகத்தை அரசு திறந்துள்ளது. எனவே வேலை தேவைக்கேற்ப ஆட்களுக்கு பயிற்சியளிக்க முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.