நாடு முழுவதும், இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தில் மத்திய மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான கோளாக அரசு தேர்வுகளை கையில் எடுத்துள்ளது. முதலில் அரசு தேர்வுகள் மூலம் இந்தியை உட்புகுத்திவிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பரப்புவதற்கு திட்டம் தீட்டி வருகிறது மோடி அரசு.
அந்த வகையில், ஏற்கெனவே தபால்துறை, ரயில்வே துறைக்கான தேர்வுகளில் மாநில மொழிகளுக்கு பதில் ஆங்கிலத்தோடு இந்தியை மட்டும் சேர்த்தது மத்திய அரசு. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் பிராந்திய மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என பா.ஜ.க அரசு முதலில் முண்டியடித்துவிட்டு, பின்னர் பல்டி அடித்தது.
இந்த நிலையில், வங்கித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கானத் தேர்வும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், வங்கித் துறை காலி பணியிடங்களுக்கான தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது, செம்மொழி அந்தஸ்து கொண்ட தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனை உடனடியாக சரிசெய்து வங்கித் தேர்வில் மாநில மொழிகளும் இடம்பெறச் செய்யவேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார்.