ஒடிசாவின் அங்கூக் மாவட்டத்தில் உள்ள கோபரா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பிரதிமா பெஹ்ரா. இவரது இளைய மகன் ரஷ்மிரஞ்சனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் துரங்கா கிராமத்தைச் சேர்ந்த லில்லி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூலை மாதம் பரத்பூரில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ரஷ்மிரஞ்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ரஷ்மிரஞ்சன் குடும்பமே அதிர்ச்சியில் முழ்கியது. கணவனை இழந்த பெண்ணும் வீட்டில் முடங்கிப்போயிருந்தார்.
இந்நிலையில், மருமகள் லில்லி சோகமே உருவாக இருந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரதிமா, மருமகளுக்கு மறுமணம் செய்யவைக்க முடிவு எடுத்தார். பின்னர் லில்லியிடம் வேறு திருமணம் செய்துகொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் முதலில் லில்லி ஒப்புக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பின்னர் சமாதானம் செய்த பிரதிமா, லில்லியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். இதனையடுத்து மருமகளுக்கு பல இடங்களில் மணமகனைத் தேடியுள்ளார்.
ஆனால் எங்கும் மணமகன் கிடைக்காத நிலையில், பிரதிமா தனது சொந்த சகோதரர் மகனையே திருமணத்திற்கு பேசி முடித்தார். மணமகனின் ஒப்புதலோடு இருவருக்கும் கடந்த புதன் கிழமையன்று தல்ச்சர் பகுதியில் உள்ள ஜகந்நாத் கோயிலில் திருமணம் நடந்துமுடிந்தது. இந்த மறுமணத்திற்கு கிராம மக்கள் பெருவாரியானோர் நேரில் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியதாக பெஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதிமா பெஹ்ரா கூறுகையில், “என்னுடைய மகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதததுதான். அவன் திரும்பி வரமாட்டான். அவனது இழப்பை 20 வயதாகும் என் மருமகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ எல்லா உரிமைகளும் அவளுக்கு உண்டு. அதனை எந்த காரணத்தைக் காட்டியும் நான் தடுக்க விரும்பவில்லை. அதனால் தான் மறுமணம் செய்துவைக்க முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார்.
மாமியார் கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறும் நாட்டில், கணவனை இழந்த மருமகளின் நலனில் அக்கறை கொண்டு மறுமணத்தை உறுதிப்படுத்திய பிரதிமாவின் இந்த முடிவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.