காவல்துறையினர் இரண்டு ஆடுகளை கைது செய்து காவல் நிலையத்தில் கட்டி வைத்திருந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானாவில் மரம் வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘சேவ் த ட்ரீஸ்’ அமைப்பு சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகளை 2 ஆடுகள் தொடர்ந்து தின்று வந்ததால், அவற்றின் மீது ஹுஸுராபாத் நகராட்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘சேவ் த ட்ரீஸ்’ அமைப்பின் ‘ஹரிதா ஹரம்’ என்ற திட்டத்தின் கீழ் ஹுஸுராபாத் நகர் முழுவதும் 900 மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததாகவும் அவற்றில் சுமார் 250 மரக்கன்றுகளை 2 ஆடுகள் தின்றுவிட்டதாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் குற்றம்சாட்டினர்.
அவர்களது புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற போலிஸார், மரக்கன்றுகளை ஆடுகள் தின்றுகொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, அந்த 2 ஆடுகளையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு வெளியே கட்டி வைத்துள்ளனர்.
ஆடுகளின் உரிமையாளர், காவல் நிலையம் வந்து ஆடுகளை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். மரக்கன்றுகளைத் தின்றதால் ஆடுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நகரத்துக்கு வெளியேதான் ஆடுகளை மேய்க்கவேண்டும் அல்லது வீட்டிலேயே கட்டி வைத்துக்கொள்ளவேண்டும் என உரிமையாளருக்கு நிபந்தனை விதித்து போலிஸார் ஆடுகளை அனுப்பியுள்ளனர்.