டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயார்க்கிற்கு விமானத்தில் ஏற தலைமுடி மற்றும் தாடி நரைத்த ஒரு வயதான முதியவர் சக்கர நாற்காலியில் தயாராக இருந்தார்.
சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நிற்க முடியாத சூழலில் இருப்பது போன்றும், பாதுகாப்பு அதிகாரிகள் அவர் அருகில் வந்தபோது, அவர்களை பார்த்து தலைகுனிந்து கொண்டதாலும் அவர் மீது சந்தேகம் வலுத்தது.
இதனடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் முதியவரின் நடவடிக்கைளை தொடர்ச்சியாக கண்காணித்தனர். பின்னர், அவரை தனி அறையில் வைத்து ‘கவனித்த’போது அவர் ஆள்மாறாட்டம் செய்தது வெட்டவெளிச்சமாகியது.
அகமதாபாத்தைச் சேர்ந்த ஜெயேஷ் பட்டேல் என்ற 32 வயது இளைஞர்தான் 81 வயதான அம்ரிக் சிங் என்பவரின் பெயரில் போலி பாஸ்போர்ட்டுடன் ஆள்மாறாட்டம் செய்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
ஜெயேஷ் பட்டேல் எப்படி வசமாக சிக்கினார் என்பது குறித்து தொழிற்பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெயேஷ் பட்டேலின் தோற்றம் மற்றும் தோல் அமைப்பு பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டதை விட மிகவும் இளமையாகத் தெரிந்தது. தனது வயதை மறைக்க சாதாரண கண்ணாடி அணிந்திருந்தார்.
இதைவைத்து நாங்கள் அவரிடம் விசாரணை நடத்தினோம். அவர் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார். இப்படி ஆள்மாறாட்டம் செய்து ஏன் அவர் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.