மத்தியில் பா.ஜ.க தலைமையில் இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதில் இருந்து நாட்டில் பல்வேறு வகையான பிரச்னைகள் எழுந்து வருகின்றன.
அதில், மிகமுக்கியமாக கடுமையான பொருளாதார சரிவு அடங்கியுள்ளது. மோடி அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில்கள் அழிவைச் சந்தித்தது போன்று பெருநிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டாக, பிரிட்டானியா, பார்லே, மாருதி, டிவிஎஸ் என உணவு உற்பத்தி, ஆட்டோ மொபைல் என பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தொழிற்சாலைகளை மூடியும், பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியும் வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டில் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
இவ்வாறு இருக்கையில், மோடி அரசோ இந்தியாவில் எந்த பொருளாதார சரிவும் ஏற்படவில்லை என முட்டுக்கொடுத்து வருகிறது. இவற்றையெல்லாம் விட மோடி அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில் அதனைக் கொண்டாடவும் முடிவெடுத்திருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க அரசின் 100 நாள் சாதனையாக நாட்டில் உள்ள ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்கள் சந்தித்து வரும் அழிவைத்தான் கொண்டாட முடியும் என விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு தொழில்களிலும், ஆலைகள் மூடப்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஜி.எஸ்.டியை முறையாக அமல்படுத்தாமல் போனதே ஆட்டோமொபைல் துறை அழிவதற்கு காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது.