புதிய மோட்டார் வாகன சட்டப்படி, சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு உயர்த்தப்பட்டுளது. இன்னும் பல மாற்றங்கள் புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சிராக் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். நேற்றைய தினம் திரிவேணி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது போக்குவரத்து போலிஸாரிடம் பிடிபட்டார். அப்போது அவரையும், அவரது ஆவணங்களையும் போக்குவரத்து போலிஸார் சோதித்தனர். அதில் ராகேஷ் மதுபோதையில் இருந்தது கண்டு தெரிய வந்திருக்கிறது.
ஹெல்மெட் அணியாதது, மதுபோதையில் வாகனம் ஒட்டியது என 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், போலிஸுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 16 ஆயிரம் ரூபாய் அபராதமா என ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார்.
இந்த சம்பவத்தால் போலிஸார் செய்வது அறியாது திகைததனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். புதிய வாகன சட்ட விதிமுறைகள் மக்களிடம் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மனதில் மேலும் எரிச்சலை கிளப்பும் விதமாக அமைந்துவிடுகிறது.