நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பல மசோதாக்களை மத்திய பா.ஜ.க அரசு தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றியது. அதன்படி, சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மசூத் அசார், ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிம், ஷகி உர் ரஹ்மான் லக்வி ஆகிய 4 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம், ஜம்மு காஷ்மீர் பேரவை, பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்திய மசூத் அசாரை மத்திய அரசு பயங்கரவாதி என அறிவித்துள்ளது. அதேபோல 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல், 2008ல் ராம்பூர் மற்றும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஷகி-உர்-ரஹ்மான் லக்வி-யையும் மத்திய அரசு பயங்கரவாதி என அறிவித்துள்ளது.
மேலும், பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிம் ஆகியோரும் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.