உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு 2017ம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய மதிய உணவு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது.
உத்தர பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் அந்தப் பள்ளியில் முறையாக சத்துணவு வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் அப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி ரொட்டியும் அதனைத் தொட்டு சாப்பிடுவதற்கு உப்பும் கொடுத்துள்ளனர். அதனை மாணவர்கள் வரிசையாக தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஆனால், அப்பள்ளியில் மாணவர்களுக்கு சப்பாத்தி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்ற கலோரி உணவு வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை ஜன்சந்தேஷ் என்ற இணையதளத்தின் நிருபர் பவான் ஜெஷ்வால் என்பவர் மொபைலில் படம்பிடித்து செய்தி வெளியிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து, உ.பி மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தனர்.
“பெரும்பாலான நாட்களில் மாணவர்களுக்கு ரொட்டியும், தொட்டுக்கொள்ள உப்பும், சில நாட்களில் சாதமும், அதற்குத் தொட்டுக்கொள்ள உப்பும் தான் அளிக்கப்படுகிறது” என்று பெற்றோர்கள் கூறினர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரை இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், மாணவர்கள் சப்பாத்தியும், உப்பும் சாப்பிட்டதை வீடியோ பதிவு செய்த பத்திரிகையாளர் மீது மாநில அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. பவான் ஜெஷ்வால் மீது பொய்யான தகவல்களை பரப்புதல், அரசின் பெயருக்கு களங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பவான் ஜெஷ்வால் நான் பார்த்ததைத் தான் செய்தியாக்கினேன். அதில் தவறு ஏதுமில்லை. அரசு பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச அரசின் இந்த பழிவாங்கும் செயலுக்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.