குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி டீ விற்றதாகச் சொல்லப்படும் ரயில் நிலையத்தில் உள்ள கடையை சுற்றுலாத்தளமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் சமீபத்தில் குஜராத்திற்கு சென்றிருந்தார். அப்போது, வத் நகரில் பிரதமர் மோடி நடத்திய டீக்கடையைப் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து அந்தக் கடையைச் சுற்றுலாத்தளமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த டீக்கடை சுற்றிலும் கண்ணாடியால் மூடப்படும் என்றும், மாற்றம் ஏதும் செய்யாமல் கடையை அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வத்நகரில் உள்ள ரயில்நிலையத்தில் தான் மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது தந்தையுடன் இணைந்து சிறு வயதில் மோடியும் டீ விற்பனை செய்து கடையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக வத்நகர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக 8 கோடி ருபாய் ஒதுக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மோடியின் நண்பரும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான பிரவீன் தெகாடியா என்பவர், “மோடியை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் டீ விற்றார் என்று சொல்வது சுத்தப் பொய்” என்று தெரிவித்து இருந்தார்.