மும்பை அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே உரான் பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.
அங்கு இன்று காலை வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். காலை 7 மணியளவில் திடீரென ஆலையில் கச்சா எண்ணெய் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் தீப்பற்றியது.
அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் உடனடியாக மூடப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து ஓ.என்.ஜி.சி நிறுவனம், “எங்கள் தீயணைப்பு சேவைகள் குழு மற்றும் நெருக்கடி மேலாண்மை குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயை அணைத்தனர். இதனால் எண்ணெய் வெளியேறும் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. எரிவாயு, ஹசிரா ஆலைக்கு திருப்பி விடப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.