சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நர்மதா அணை விவகாரம் தொடர்பாக இடம்பெயர்வு செய்யப்படுபவர்களின் நிலையை எடுத்துக்கூறும் விதமாக கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32 ஆயிரம் மக்கள் அகற்றப்படுவதை எதிர்த்தும், சர்தார் சரோவர் அணை மதகுகளைத் திறந்து, வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மேதா பட்கர்.
மத்திய பிரதேச மாநிலம் பட்வானி மாவட்டத்தில் சோட்டாபடா கிராமத்தில் 5 பெண்களுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மேதா பட்கர். தற்போது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 1,000 பேர் இணைந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த சனிக்கிழமையன்று மேதா பட்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனாலும், கடும் உடல்நிலை பாதிப்புக்கு மத்தியிலும் இன்று (திங்கட்கிழமை) அவரது உண்ணாவிரதம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.