நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி 5% ஆகக் குறைந்து பொருளாதார நிபுணர்களையும், பொதுமக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசின் தவறான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்தான் காரணம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. கடந்த காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 5% என்பது இந்திய பொருளாதாரம் நீண்டகாலமாக மந்தநிலையில் உள்ளதை வெளிக்காட்டுகிறது. இந்திய பொருளாதாரம் மிக விரைவான விகிதத்தில் வளரக்கூடிய ஆற்றலைக் கொண்டது. ஆனால் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசின் தவறான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்தான் காரணம்.
உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6% ஆக இருப்பது வருத்தமளிக்கிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த முட்டாள்தனமான நடவடிக்கையும், ஜி.எஸ்.டி வரியைச் சரியாக திட்டமிடாமல் செயல் படுத்தியதுதான் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம்.
மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் 3.5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தவறான மனித முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் வெறுப்பு அரசியலை ஒதுக்கிவைத்து விட்டு பொருளாதார சிந்தனையாளர்களுடன் ஆலோசனை நடத்தி விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.