மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிலைமையை சரி செய்ய, எடுக்கப்பட உள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில், முக்கிய பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் படி பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ரூ.17.95 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்துடன், நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக மாறுகிறது.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வாங்கி இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவாக்கப்படுகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறது. இது நாட்டின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும்.
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ரூ.8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் ஏழாவது பொதுத்துறை வங்கியாக இது விளங்கும்.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் சிந்த் பேங்க் ஆகிய வங்கிகள் இப்போது இருப்பது போலவே தனியாக செயல்படும்.
2017ம் ஆண்டில் 27ஆக இருந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது 12 ஆக குறைக்கப்படுகிறது. வங்கிகள் இணைப்பால் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளதாராம் சீராக இருப்பதாகவும், பொருளதார முன்னேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்திய ஜி.டி.பி குறித்த தரவுகள் வெளியாகின. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் ஜி.டி.பி 5% ஆக சரிந்துள்ளது. இதன் மூலம், என்ன சொல்லி சமாளித்தாலும், பொருளாதார சரிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.