நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சற்று முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தியாவின் ஜிடிபி 5% ஆகக் குறைந்து பொருளாதார நிபுணர்களையும், பொதுமக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சற்று முன்புதான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பைப் பற்றிப் பேசினார். பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கித் திருப்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்த சிறிது நேரத்திலேயே இப்படியொரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவே இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.
உற்பத்தித் துறையில் கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் இருந்த 12.1% வளர்ச்சி இந்தக் காலாண்டில் 0.6% ஆக குறைந்து பலத்த அடி வாங்கியுள்ளது. கட்டுமானத்துறை கடந்த 2018-2019 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 9.6% ஆக இருந்தது தற்போது 5.7% ஆக சரிந்துள்ளது.
விவசாயம், வனங்கள், மீன்பிடித்தல் ஆகிய துறைகளின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டிலிருந்து 3.1% குறைந்து வெறும் 2% ஆகச் சரிந்துள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2012-2013 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.9 ஆக இருந்தது. அதற்குப் பின்னர் இப்படியொரு சரிவை இப்போதுதான் சந்தித்திருக்கிறது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
பொருளாதார மந்தநிலை என்பது உண்மையில்லை என்று கூறும் நிதியமைச்சர், இந்த ஜி.டி.பி சரிவை என்ன சொல்லி நியாயப்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.