ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியது.
அதுமட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் காஷ்மீர் மக்களின் அன்பைப் பெற்ற தலைவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.
மேலும், மாநிலம் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாக, வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற பொய்யை பா.ஜ.க அரசியல் கட்சி தலைவர்கள் சரளமாக பேசிவந்தனர். மேலும் அரசுக்கு எதிராக போராடுபவர்களை பா.ஜ.க அரசு சிறையில் தள்ளுவதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாயின.
அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதில் சிலர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க அரசு மறுத்து வந்த நிலையில், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திபின் போது பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டு பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது,“கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் சுட்டது உண்மைதான். எனினும் இடுப்பிற்கு கீழேதான் சுடப்பட்டது. அதில் ஒருவர்தான் கழுத்தில் காயம் அடைந்தார். தற்போது அவர் நலமாக உள்ளர்” என மாலிக் சத்யபால் தெரிவித்தார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட செல்போன் சேவை மற்றும் இணையத்தள சேவைகளை தீவிரவாதிகள்தான் பயன்படுத்தி வந்ததாகக் கூறிய சத்யபால் மாலிக், அதனாலேயே அங்கு அந்த சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். ஆளுநரின் இந்த செய்தி மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு, பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவே இல்லை என்று சொன்னவர்கள் தற்போது பயன்படுத்தினோம், ஒருவர் காயம் எனச் சொல்கிறார்கள். இன்னும் சில நாட்களுக்கு பிறகு இவ்வளவு பேர் தான் இறந்தார்கள் என்று சொல்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.