உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாமிலி மற்றும் முசாபர் நகர் மாவட்டங்களில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.
இதில் 62 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்குச் சென்று குடியேறினர். இந்தக் கலவரத்தைத் தூண்டியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சிங் சோம் உள்ளிட்ட சிலர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த கலவரச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரித்து வந்த நிலையில், கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கு 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்தான், முசாபர் நகர் வன்முறை வெறியாட்டம் தொடர்பாக, பா.ஜ.க தலைவர்கள் மீதுள்ள 72 வழக்குகளையும் ரத்து செய்ய முதல்வர் ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
இதற்காக முசாபர் நகர் வழக்குகள் அனைத்தையும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ள ஆதித்யநாத், அந்த சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான மனுக்களை விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.