பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவியுள்ளதே பா.ஜ.க தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதற்குக் காரணம் என, சர்ச்சை பேச்சுகளுக்குப் பெயர்போன சாத்வி பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய பா.ஜ.க தலைவர்கள் உடல்நலக்குறைவால் சமீபத்தில் காலமானார்கள்.
இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், “தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம், இது மிகவும் மோசமான நேரம்; பா.ஜ.கவுக்கு எதிராகவும், பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தீய சக்திகளைப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என எச்சரித்தார்.
நான் அதை அப்போதே மறந்துவிட்டேன். ஆனால், இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும்போது அவர் கூறியது உண்மை என்றே தோன்றுகிறது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார். பிரக்யா தாக்கூர் எதையாவது பேசி சர்ச்சையாவது வழக்கம் தான் என்பதால், பா.ஜ.க-வினரே இதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.