ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். பணி காரணமாக ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரைரங்பூர் பகுதியில் தற்போது வசித்து வரும் முத்துக்குமரனுக்கு ஆந்திராவின் குண்டூரில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட பார்சல் ஒன்று வந்துள்ளது.
அதனை திறந்த பார்த்த முத்துக்குமரன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில், பார்சல் பெட்டிக்குள் இருந்து சுமார் 4 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று தலையை நீட்டியபடி இருந்துள்ளது.
பாம்பைப் பார்த்து மிரண்டு போன முத்துக்குமரன் அலறியடித்து வீட்டிற்கு வெளியே ஓடிவந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் விஷப்பாம்பை பிடித்து வனத்தில் பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.
பார்சலில் வந்த பெட்டிக்குள் பாம்பு இருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்சலில் பாம்பு இருந்தது குறித்து கொரியர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.