கேரளாவின் கொச்சியை அடுத்த எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த ஆக.,19ம் தேதியன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல், எடப்பள்ளி தேசிய நெஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த எலமக்கரா பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் மீது மோதும் வகையில் கார் ஒன்று அதிவேகமாக வந்தது.
அந்த கார் தன் மீது மோதாமலிருக்க காரின் பேனட்டில் தாவிப் படுத்த நிஷாந்த் காரின் முன்புறத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார்.
குடிபோதையில் இருந்த ஓட்டுநர், காரின் வேகத்தைக் குறைக்காமல் 400 மீட்டர் தூரத்துக்கு வேகமாக சென்ற பின்னரே காரை திடீரென நிறுத்தினார். அந்த வேகத்தில் தூக்கி வீசப்பட்ட நிஷாந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகே இருந்தவர்கள், நிஷாந்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன் பிறகு போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சி போலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததால் தாறுமாறாக இயக்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
பின்னர், கச்சேரிப்பாடியைச் சேர்ந்த நாகாஸ் தான் போதையில் காரை இயக்கியது என தெரியவர, அந்த நபரை கைது செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்தினால் பலத்த காயமடைந்த நிஷாந்திற்கு வலது காலில் 3 இடங்களில் எலும்பு முறிவும், இடது காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், நிஷாந்தின் தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.