சென்னையில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்செழியன் என்ற பிரதீப். இவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
பிரதீப்புக்கு தினந்தோறும் இரவுப் பணி என்பதால் பகலில் வீட்டிலேயே இருந்துள்ளார். உடன் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து பெண்களின் செல்போன் நம்பர்களை வாங்கி அவர்களிடம் போனில் பேசியுள்ளார்.
அதன் பின்னர் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்களைக் குறிவைத்து பணம் பறிக்கத் திட்டம் தீட்டியுள்ளார் பிரதீப். இந்த செயலுக்கு அவரது தோழி அர்ச்சனா ஜெகதீஸ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பறை பணியாளராக வேலை பார்க்க அழகான பெண்கள் தேவை எனச் சொல்லி அர்ச்சனா ஜெகதீஸ் வலை விரிக்கத் தொடங்கியுள்ளார்.
பல லட்சக் கணக்கில் ஊதியம் கிடைக்கும் என்ற அர்ச்சனாவின் பேச்சில் மயங்கிய பெண்களிடம் பிரதீப் வேறொரு அலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு நேர்காணல் செய்வது போன்று நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கார்ப்பரேட் நிறுவன நேர்முகத்தேர்வு போன்று பல்வேறு கேள்விகளைக் கேட்க பெண்களும் அதனை நம்பி அவர்களின் சுய விவரங்கள் அனைத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.
நாளடைவில், வாட்ஸ்-அப்பில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் மூலம் பெண்களிடம் பேசத் தொடங்கிய பிரதீப், நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிய வேண்டுமென்றால் உங்களுடைய உடலமைப்பு அழகாக இருக்க வேண்டும். எனவே நிர்வாண புகைப்படங்களை அனுப்பவேண்டும் எனப் பேசியுள்ளார் பிரதீப்.
பிரதீப் பற்றி அறியாத பெண்களும், அதை நம்பி தங்களது புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். பின்னர், வீடியோ கால் மூலம் பேசும் போதும் நேரலையாக பெண்களின் உடலமைப்பைக் காட்ட வைத்துள்ளார். இவை அனைத்தையும் தனது போனில் பதிவும் செய்து வைத்துள்ளார் பிரதீப்.
போனில் பேசி புகைப்படங்களை அனுப்பிய பெண்களிடம் வேலைக்கு தேர்வாகிவிட்டதாகக் கூறி ஏமாற்றிய பிரதீப், சில நாட்கள் கழித்து அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு, உங்களுடைய நிர்வாண புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. அதனை நான் சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க எனக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டும் எனச் சொல்லி மிரட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் பிரதீப் இதுபோல தனது வேலையைக் காட்ட, சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் போலிஸிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சென்னைக்கு விரைந்த ஐதராபாத் போலிஸார் பிரதீப்பை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடம் இருந்த கணினி, செல்போன் உள்ளிட்ட பல பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் பெற்று மிரட்டி அதன் மூலம் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஓரிரு பெண்கள் மட்டுமல்லாமல் 16 மாநிலங்களில் உள்ள 600 பெண்களிடம் இதுபோன்று பேசி பிரதீப் பணம் பறித்துள்ள அதிர்ச்சி தகவல் விசாரணையின் மூலம் வெளிவந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட பிரதீப்பிடம் தொடர்ந்து ஐதராபாத் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.