ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என தெரிவித்தது.
தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இந்திய குடியரசுத்தலைவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார்.
முன்னதாக, காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியது மத்திய பா.ஜ.க அரசு. மத்திய அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையும், பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்து தி.மு.க அறிவித்தபடி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளது.
தி.மு.க அழைப்புவிடுத்த இந்தப் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதுமுள்ள 15 கட்சிகள் பங்கேற்றுள்ளன. அக்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரில் எதேச்சதிகார பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும், பொதுமக்களை அச்சுறுத்தும் எதேச்சதிகாரப் போக்கினைக் கைவிட்டு, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும நடவடிக்கை எடுக்கக்கோரியும் எம்.பி-கள் முழக்கமிட்டு வருகின்றனர்.