ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டு ப. சிதம்பரம் தலைமறைவாக இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், '' ஐ.என்.எக்ஸ் வழக்கில் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. பொய்யர்கள் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பி வருகிறார்கள்.
சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம். தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். ஐ.என்.எக்ஸ் வழக்கில் என் மீதும், குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.
நான் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை. நேற்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்காக என்னுடைய வழக்கறிஞர்களுடன் தயாரிப்பில் இருந்தேன். ஆனால், வேறு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தலைவணங்கி ஏற்கிறேன். சி.பி.ஐ, அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது உண்மை எனில் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். நிச்சயம் நீதி காப்பாற்றப்படும்” என தெரிவித்தார்.
பேட்டி முடிந்து காரில் கிளம்பிச் சென்ற ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்று, அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். தற்போது அவரது வீட்டுக்குள் சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளதால், அவர் கைது செய்யப்படுவாரோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. அவரது வீட்டைச் சுற்றி காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.