கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் ஜெயின் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவர், சொந்தமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 17ம் தேதி ஜெயக்குமார் ஜெயினின் மனைவி பூஜா தேவியும், 12 வயது மகனும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்கள். வீட்டில் ஜெயக்குமாரும், அவரது 15 வயது மகளும் மட்டும் இருந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து, இரவு நேரத்தில் திடீரென கரும்புகை வந்ததால், பதறிய அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கழிவறையில் இருந்து புகை வருவதை அறிந்து உள்ளே சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கிடந்ததைக் கண்டு தீயணைப்புத்துறையினர் போலிஸாரை வரவழைத்தனர்.
அதன் பின்னர், வீட்டை நோட்டமிட்டதில் ஜெயக்குமாரின் 15 மகள் எதுவும் தெரியாதது போன்று எவ்வித பதட்டமும் இல்லாமல் இருந்ததை கண்டுள்ளனர். சிறுமியிடம் கேட்டபோது, ‘‘அம்மா உறவினரின் கல்யாணத்துக்கு போயிருக்காங்க, நான் பக்கத்து வீட்ல போய் சாப்பிட்டு வந்தேன்’’ என சாதாரணமாக பதிலளித்துள்ளார்.
வீட்டில் ரத்தக்கறையும், சிறுமியின் காலில் காயமும் இருந்ததால் எந்த பதட்டமும் இல்லாமல் பதிலளித்ததை சந்தேகித்து மேலும் போலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது சிறுமி கூறியதைக் கேட்டு போலிஸாரே அதிர்ச்சிக்குள்ளாகினர். அதாவது, சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் பிரவீன் என்ற 18 வயதுடைய கல்லூரி மாணவனை தான் காதலித்ததாகவும், அது தனது அப்பாவுக்கு பிடிக்காததால் போனை வாங்கி வைத்துவிட்டு திட்டியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கோபமுற்றதால் தனது காதலன் பிரவீனுடன் சேர்ந்து அப்பாவை கொலை செய்ய திட்டமிட்டோம்.
தன்னுடைய அம்மா பூஜாதேவி வெளியே சென்ற நேரம் பார்த்து, பாலில் தூக்க மாத்திரை போட்டு கொடுத்ததும் அப்பா தூங்கிய பிறகு அவரை பிரவீனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றோம். பின்னர், உடலை பாத்ரூமில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரிய வைத்தோம்.
இதற்கிடையில், வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறை முழுவதையும் இரண்டு பேரும் சேர்ந்தே துடைத்தோம். யாராவது கேட்டால் ஷாக் அடித்து இறந்துவிட்டார் என காரணம் சொல்லிக்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து காதலன் பிரவீனையும், 15வயது சிறுமியையும் கைது செய்த போலிஸார், சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு பிரவீனை சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகளே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதில் இப்படி ஒரு காதல் தேவையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.