தற்போது டெபிட் கார்டுகள் எனப்படும் ஏ.டி.எம் கார்டுகள் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமுள்ள ஏ.டி.எம் மையங்கள் மற்றும் ஆன்லைன் முறைகளில் டெபிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டு பயன்பாட்டை குறைக்கத் திட்டமிட்டுள்ளது நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி.
சமீபத்தில் நடைபெற்ற ஸ்டேட் வங்கிக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ரஜ்னீஷ் குமார், அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெபிட் கார்டுகளின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும் எனவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தற்போது இந்தியா முழுக்க 90 கோடி டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும், 3 கோடி க்ரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது எஸ்.பி.ஐ யோனோ செயலி மூலம் டெபிட் கார்டு இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க முடியும் என உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார் ரஜ்னீஷ் குமார்.
எஸ்.பி.ஐ யோனோ செயலியைப் பயன்படுத்தி QR Code மூலம் எளிமையான முறையில் யோனோ கேஷ் மையங்களில் பணத்தை எடுக்கவும், விற்பனையகங்களில் கட்டணங்களைச் செலுத்தவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
மேலும், ஏற்கெனவே ஸ்டேட் வங்கி 68,000 யோனோ கேஷ் மையங்களை அமைத்துள்ளதாகவும், அடுத்த 18 மாதங்களுக்குள் 10 லட்சம் மையங்கள் எனும் இலக்கை எட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிளாஸ்டிக் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகக் குறைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.