இந்தியா

காஷ்மீர் நிலவரங்களைப் பகிர்ந்த மாணவி தேசத்துரோக சட்டத்தில் கைது ? : இளைஞர்களைக் கண்டு அஞ்சுகிறதா பா.ஜ.க !

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சிக்கும் டெல்லி மாணவி ஷீலா ரஷீத்தை கிரிமினல் வழக்கில் கைது செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிலவரங்களைப் பகிர்ந்த மாணவி தேசத்துரோக சட்டத்தில் கைது ? : இளைஞர்களைக் கண்டு அஞ்சுகிறதா பா.ஜ.க !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சிக்கும் டெல்லி மாணவி ஷீலா ரஷீத்தை கிரிமினல் வழக்கில் கைது செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷீலா ரஷீத் எனும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சமூக ஆர்வலராகச் செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் மீது தேசத்துக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஷ்மீர் நிலவரம் குறித்த ஷீலா ரஷீத்தின் பதிவுகள் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறார்.

ஷீலா ரஷீத்தின் ட்விட்டர் கணக்கு லட்சக்கணக்கானோரால் பின்தொடரப்படுகிறது. அவர் பகிரும் செய்திகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. இவர் செய்து வருவது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றமாகும். அவரது செயல்பாடுகளை முடக்கி, கிரிமினல் குற்றச்சாட்டில் உடனடியாக ஷீலா ரஷீத்தை கைது செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இந்திய இராணுவம், பொதுமக்களின் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் புகுந்து சோதனை என்கிற பெயரில் அட்டூழியம் செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஷீலா ரஷீத். மேலும், நான்கு ஆண்கள் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

காஷ்மீரிலிருந்து வெளியேறியவர்கள் தெரிவிக்கும் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார் ஷீலா ரஷீத். இதனால், பா.ஜ.க அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. காஷ்மீர் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ஜ.க அரசை கடுமையாகத் தாக்கிய ஷீலா ரஷீத், பா.ஜ.க-வை எதிர்த்துப் பேசுபவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் உதவுவதாக பா.ஜ.க-வினர் அவதூறு பரப்புவதையும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories