இந்திய வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூட திட்டமிட்டுள்ளன.
வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமான சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையை அடுத்த பாடியில் இயங்கி வருகிறது. வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் பாடியில் உள்ள ஆலையை இரண்டு நாட்களுக்கு மூடப்போவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடியில் உள்ள தொழிற்சாலையில் ஆகஸ்டு 16 மற்றும் அகஸ்டு 17ம் தேதிகளில் எவ்வித உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெறாது. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வியாபாரத்தில் மந்த நிலை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக முடிவு தான் என்றாலும், ஒரு வேலை வியாபாரத்தில் மந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயமும் இருக்கும் என அச்சம் உருவாகியுள்ளது.