ராஜஸ்தானில் கடந்த பா.ஜ.க ஆட்சியில், பசு காவல் குண்டர்களின் தாக்குதலால் மாநிலம் முழுவதும் சிறுபான்மையினர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். கடந்த 2017ம் ஆண்டு பெலு கான் என்பவர் ஜெய்ப்பூர் பகுதியிலிருந்து மாடுகளை வாங்கிக் கொண்டு தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை பெரோர் பகுதியில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் வழி மறித்தனர். இரைச்சிக்காக மாடுகளை கடுத்துவதாகக் கூறி அவரைக் கடுமையாகத் தாக்கினர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்து போன பெலு கான் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பின்னர் ராஜஸ்தான் போலிஸ் தாக்குதலில் ஈடு,பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை அமர்வில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதனால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செல்போன் கேமராவில் தாக்குதல் காட்சி பதிவாகி இருந்தாலும் அதனைச் சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியது விசாரணை நீதிமன்றம்.
”இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீது ஏற்பட்ட களங்கம் என வருங்காலம் சொல்லும்” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை மாலை மூத்த அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தின் முடிவில், பெலு கான் வழக்கில் 6 பேரை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில முதல்வர் அமைத்துள்ளார்.
முன்னதாக விசாரணையில் வழக்கில் எந்த இடங்களில் குற்றங்களை நிரூபிக்க முடியாமல் போனது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்த முடியவில்லை, எங்கு அரசு தரப்பு தோல்வி அடைந்தது, சாட்சியங்கள் அழிக்க முயற்ச்சி எதுவும் நடைபெற்றதா எனவும் இந்த குழு விசாரணை நடத்தவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு டி.ஐ,ஜி நிதின் தீப் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விசாரணைக் குழு குறித்து பெலுகானின் குடும்பத்தினர் கூறுகையில், “பெலுகான் வழக்கு விசாரணையில் சிறப்பு விசாரணைக் குழுவை ராஜஸ்தான் அரசு உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அந்த விசாரணைக் குழு எங்களுக்கு நீதியை உறுதி செய்யும். ஆனாலும் நாங்கள் உயர்நீதிமன்றம் செல்வோம்” என தெரிவித்துள்ளனர்.