இந்தியா

பதற்றமான சூழலில் பொறுப்பில்லாமல் பேசுவதா! - ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்!

எதிர்வரும் சூழலைப் பொருத்து இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை மாறுபடலாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருப்பது, சர்வதேச அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பதற்றமான சூழலில் பொறுப்பில்லாமல் பேசுவதா! -   ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், எதிர்வரும் சூழலைப் பொருத்து இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை மாறுபடலாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருப்பது, கூடுதல் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி பொக்ரானில் வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்தியா மிகப்பெரிய அணு ஆயுத சக்தி என்பதை உலகிற்கு உணர்த்தியவர் வாஜ்பாய். அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் இன்றளவும் இந்தியா உறுதியாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் சூழலைப் பொருத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்.” என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்னை சர்வதேச அளவில் புகைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கிடையே, ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு, போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு அதிர்ச்சியளிப்பதாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய நாட்டின் மீது அணுகுண்டுகளால் தாக்குதல் நடக்காதவரை முதலில் அணுகுண்டுகளை பயன்படுத்த மாட்டோம் என்கிற இந்தியாவின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அணுகுண்டு சோதனை செய்யப்படும் "பொக்ரானிலிருந்து" இதை அறிவித்திருப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் பச்சை துரோகம் . இதைவிட உலகத்திற்கு எதிரான ஒரு அறிக்கை இருக்காது. அதுவும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிகவும் மோசமாக உள்ள காலகட்டத்தில் இப்படியான அறிக்கைகள், நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

ஏற்கனவே இருந்த "முதலில் பயன்படுத்த மாட்டோம்" என்கிற கொள்கை சரியாக இருந்ததா?. இல்லை, என்பதுதான் பதில். அந்நிய நிலப்பரப்பில் இந்திய ராணுவம் ஆக்கிரமித்து முன்னேறும் போது அதை தடுக்கும் வகையில் எதிரி நாடு "தந்திரோபாய" (tactical) அணுகுண்டுகளை பயன்படுத்தப்படுத்தினால், இந்தியாவிற்கு அணுகுண்டுகளை பயன்படுத்தும் உரிமை கிடைத்துவிடுகிறது. மற்றொரு நாடு இந்திய நிலப்பரப்பின் மீது அணு குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தும்வரை இந்தியா காத்திருக்க வேண்டியதில்லை.

காந்தியின் தேசம் உலகத்திற்குக் கொடுத்த பேராயுதம் "அகிம்சை". அதுவும் அகிம்சா வழிப்போராட்டங்களின் வாயிலாகப் பெறப்பட்ட இந்தியாவின் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் சமயத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. மிகவும் பதட்டமான காலகட்டத்தில் பொறுப்பாகச் செயல்படவேண்டிய அமைச்சர் இப்படி தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories