சுதந்திர தின உரையில் “நாட்டுக்கு செல்வத்தை உருவாக்கித்தரும் கார்ப்பரேட் நிறுவனங்களை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது” எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
இந்தியாவின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப் படுவதையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி.
அப்போது பேசிய அவர், “செல்வத்தை உருவாக்குவதுதான் மிகப்பெரிய தேசப் பற்றுக்கு உதாரணம். தொழில் நிறுவனங்கள் மூலம் செல்வம் உருவாக்கப்பட்டால்தான் அதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க முடியும்” என்றார்.
மேலும் பேசிய மோடி, “செல்வச் செழிப்பை உருவாக்குவது மிகவும் அவசியமான நடவடிக்கை. தொழில்கள் மூலம் செல்வத்தை உருவாக்குபவர்களே இந்தியாவின் சொத்து. அவர்களை மதிக்கவேண்டும். நாட்டின் செல்வ வளத்தை உருவாக்குபவர்களை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது முறையல்ல” என உரையாற்றினார் மோடி.
மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோவதாகவும், நாட்டைச் சுரண்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கையளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன.
அம்பானி, அதானி உள்ளிட்டவர்களோடு மிகுந்த நெருக்கம் காட்டும் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர், அந்நிறுவனங்களின் நலனுக்காக நாட்டையே அடமானம் வைப்பதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சந்தேகிக்கக்கூடாது என பிரதமர் மோடி பேசியுள்ளது விவாதத்திற்குள்ளாகி வருகிறது.