நாடு முழுவதும் 73வது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான வர்த்தக மற்றும் வாணிப உறவுகளை முறித்து பல அதிரடி உத்தரவுகளை வெளியிட்டது.
மேலும், இந்தியா மீது எவ்வித போரும் நடத்தமாட்டோம் என்றும், சட்ட ரீதியிலேயே எங்களது போர் இருக்கும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.
73வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், எவ்வித அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்திய எல்லை உட்பட பல பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை பலபடுத்தியுள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது.
இதில், உரி மற்றும் ரஜோரி பகுதியில் நடந்த இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ. மற்றும் அல்ஜசீரா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள போர் நிறுத்த கட்டுப்பாட்டு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் பலியானதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்ததற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டினால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.