காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தும் மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தெரியவந்தால் மாநிலத்தில் கலவரம் உண்டாகும் என அறிந்து, காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் ஊடுருவ உள்ளதாக செய்தி பரப்பி, அம்மாநிலத்துக்கான தொலைதொடர்பு சேவைகளை முடக்கியும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்து சர்வாதிகார போக்கை கடைபிடித்தது மோடி அரசு.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டபின் காஷ்மீரில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவில் தளர்வு ஏற்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கிடையில், 2018ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதில், சிறந்த உருது மொழி படத்துக்கான விருதுக்கு ‘ஹமீத்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘ஹமீத்’ படத்தில் நடித்த காஷ்மீரைச் சேர்ந்த தல்ஹா அர்ஹத் ரேஷி என்ற சிறுவன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான்.
இது தொடர்பாக, அச்சிறுவனுக்கு தகவல் தெரிவிப்பதற்காக படக்குழுவினர் தொடர்பு கொண்டபோது, தொலைதொடர்பு சேவை இல்லாததால் என்ன செய்வதென தவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பேசிய இயக்குநர் இஜாஸ் கான், “தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து சிறுவனுக்கு தகவலளிக்க முடியாதது வேதனையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் இணைய சேவை, செல்போன் சேவை என அனைத்து தகவல் பரிமாற்ற சேவைகளும் வழங்கப்பட்டு விட்டதாக கூறிய மத்திய அரசு, தற்போது அம்மாநிலத்தில் தனது சர்வாதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவி வருவது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.