நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
இதனை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்காமல், ராகுல் காந்தியே தலைவராக தொடரவேண்டும் என பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வலியுறுத்தினர். ஆனால், தன்னுடைய முடிவில் இருந்து ராகுல் காந்தி பின்வாங்காமல் இருந்தார்.
2 மாதங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாத நிலையில் நேற்று டெல்லியில் தலைவரை தேர்ந்தெடுக்க காரிய கமிட்டி நேற்று கூடியது. கூட்டத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தியதற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் #ThankYouRahulGandhi என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் தங்களது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதில், ”காங்கிரஸ் தலைவராக இல்லாவிட்டலும் சிறந்த மனிதராக எங்களது மனதை கொள்ளைக் கொண்டவர்” என ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.