காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவுகளை ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், காஷ்மீரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களை சட்டம் இயற்றுவதற்கு முன்கூட்டியே வீட்டுச்சிறையில் அடைத்து வைத்தது, 144 தடை உத்தரவு பிறப்பித்தது, ராணுவத்தை இறக்கியது என சர்வாதிகார போக்கைக் கடைபிடித்தது பா.ஜ.க அரசு.
இந்த நிலையில் நேற்று ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியிருந்தார்.
தற்போது, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காஷ்மீர் பெண்கள் தொடர்பான மனோகர் லால் கட்டாரின் பேச்சு வெறுக்கத்தக்கது மற்றும் கண்டனத்துக்கு உரியது என்றும், பலவீனமான மனிதனின் மனதில் இத்தனை ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அளித்திருக்கும் பயிற்சியையே இது எடுத்துக்காட்டுகிறது என்றும் பெண்கள் ஆண்களுக்குச் சொந்தமான உடைமைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.