மகராஷ்டிர மாநிலம் தானே கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் வித்யாசாகர் சவான். இவர் கடந்த மார்ச் மாதம் கலெக்டர் அலுவலக உணவு விடுதியில் தனது நண்பருடன் பேசி கொண்டு இருந்த போது, தனது மனைவியை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
அப்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த நச்சிகேத் ஜாதவ் என்பவர் இதைக் கேட்டிருக்கிறார். பின்னர் சவானிடம் நைசாக பேசி, தனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் பூஜை செய்தால் வெற்றி நிச்சயம் எனக்கூறி சாமியார் குருதேவ் மகராஜ் என்பவரை ஜாதவ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்பின்னர் சவான் மனைவியை வைத்து போலி சாமியார் பூஜை நடத்திவிட்டு ரூ. 20 லட்சத்தை கறந்துச் சென்றுள்ளார். தொடர்ந்து சவானின் மனைவி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார்.
ஆனால், அவர் வெறும் 1,188 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சவான், தனது மனைவியை தேர்தலில் வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் சின்ட்வாரா மாவட்டத்தை சேர்ந்த சாமியார் குருதேவ் மகாராஜ், நவிமும்பை கன்சோலியை சேர்ந்த நச்சிகேத் ஜாதவ் உள்பட மூன்று பேர் தன்னிடம் ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டதாக வித்யாசாகர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.
இதன்அடிப்படையில் போலீசார் சாமியார் உள்பட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.