காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. இதற்கு நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்புக் குரல்கள் ஒலித்து வருகின்றன.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்கு முன்னதாக, அம்மாநிலத்தில் அதிகப்படியான இராணுவ கெடுபிடிகளை அமைத்தும், அம்மாநில அரசியல்வாதிகளை வீட்டுச் சிறையில் அடைத்தும் வைத்திருந்தது மத்திய அரசு.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் சில இடங்களுக்கு மட்டும் தகவல் தொடர்பு சேவைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் காஷ்மீருக்கு வந்தபோது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இருவரையும் தடுத்து நிறுத்தியதாக ஸ்ரீநகர் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.